புதுக்கோட்டையில் இப்போது பெய்து வரக்கூடிய மழையால் விவசாயிகள் நெல், மக்காச் சோளம், கரும்பு, நிலக் கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் வேளாண்மைதுறை, தோட்டக்கலைதுறை, வேளாண் விற்பனைதுறை போன்றோர் கொண்ட சிறப்பு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ சரியாக பின்பற்றாத 2 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக விற்பனை தடைவிதித்து உத்தரவிடப்பட்டு, முறையாக பின்பற்றப்படாமைக்கான விளக்கம் கோரப்பட்டு உள்ளது. ஆகவே சில்லறை உரவிற்பனையாளர்கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி வாயிலாக விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும்.
அதன்பின் உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்சம் விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களுடன் வேறுசில இடுப்பொருட்களை இணைத்து வழங்கக் கூடாது. விவசாயிகள் இது தொடர்ப்க ஏதேனும் புகார் தெரிவிக்க தங்களது பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட உர கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மொத்த உர விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதிபெறாத இடங்களில் இருப்பு வைக்கக் கூடாது. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் தெரிவித்துள்ளார்.