பேருந்தில் ஒரு ரூபாய் அதிக கட்டணம் வசூலித்ததற்கு நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றவரின் செயல் பாராட்டுகளைப் குவித்து வருகிறது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தனியாருக்கு சொந்தமான அரவிந்த் ட்ரான்ஸ்போர்ட் பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதற்கு அவரிடம் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி 24 ரூபாய் மட்டுமே தூத்துக்குடிக்கு செல்ல வசூலிக்கப்பட வேண்டும் என்பதால் நடத்துனரிடம் இசக்கிமுத்து கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்ததாகவும் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் இசக்கிமுத்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தார்.
அவரது வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் தேவதாஸ் மற்றும் உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சிவன்மூர்த்தி ஆகியோர் இசக்கிமுத்து தொடர்ந்த வழக்கிற்கு சரியான விளக்கத்தை கொடுக்கும்படி அரவிந்த் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த பேருந்து நிறுவனம் அரசின் ஆணையை மீறி கட்டணம் வசூலிக்கப்பட வில்லை. அவர் கூறியபடி மன உளைச்சல் தரும் படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டிருந்தது. அதேபோன்று போக்குவரத்து அலுவலகம் தரப்பில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இசக்கிமுத்துக்கு அழைப்பு விடுத்தும் அவர் ஆஜராகவில்லை என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மேற்கொண்ட விசாரணையில் அவர் கூறிய குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.
இரண்டு தரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள் எதிர்மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்ற காரணத்தினால் மனுதாரர் இசக்கிமுத்துவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரிடம் அதிகமாக வசூலிக்கப்பட்ட ஒரு ரூபாயை திரும்ப செலுத்துவதுடன் நஷ்ட ஈடாக 15 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்குக்கு செலவிடப்பட்ட ஐந்தாயிரம் ரூபாய் என 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அரவிந்த் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதோடு ஆறு மாதத்திற்குள் இந்த தொகையை செலுத்தி விட வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஒரு ரூபாய் கூடுதலாக பேருந்து நடத்துனர் வசூலித்ததை தொடர்ந்து பேருந்து நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி ஒரு ரூபாயை திரும்பப் பெற்ற இசக்கிமுத்துவின் செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது