பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ தென்னிந்திய சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன், வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே ஆனூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாணி ஸ்ரீயின் மகன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வாணிஸ்ரீக்கு சொந்தமான சென்னை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்த 4 கிரவுண்டு இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.
இந்த இடத்தை மீட்பதற்காக வாணி ஸ்ரீ உச்சநீதிமன்றம் வரை சென்றும் பல வருடங்களாக அவரால் மீட்க முடியவில்லை. இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து நடிகை வாணிஸ்ரீயின் இடம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகை வாணிஸ்ரீ இடம் கொடுத்தார். இது தொடர்பாக நடிகை வாணி ஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனக்கு சொந்தமான இடத்தில் நான் வாணி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வந்தேன்.
அது நஷ்டம் அடைந்ததால் நிறுவனத்தை மூடி விட்டேன். அதன்பின் என்னுடன் நட்பாக பழகிய சிலரே என்னுடைய ஏமாற்றி போலி பத்திரம் மூலம் என்னுடைய இடத்தை விற்று விட்டனர். இந்த இடத்தை மீட்பதற்காக பல ஆண்டுகளாக நான் போராடினேன். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் பலன் கிடைக்கவில்லை. இந்த சோகத்தில் தான் என்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினால் என்னுடைய இடம் எனக்கு கிடைத்துள்ளது. மேலும் முதல்வரை என்னுடைய மகனாக நான் பார்க்கிறேன் என்று கூறினார்.