கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்டர் வட்டி கொடுமையால் தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அவசர தேவைக்காக தனக்கு தெரிந்த நபரிடம் வட்டி பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்த்து தினேஷ் மொத்தமாக கட்டியுள்ளார் . ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பணத்தாசைக்கு எல்லை இல்லாமல் போனது. அதனால் மேற்கொண்டு பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ் அவசர முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தான் பேசிய வீடியோ ஒன்றை போலீசாருக்கு அனுப்பியுள்ளார். அதில், என்னை அனைவரும் ஏமாற்றி விட்டார்கள், நான் வாங்கிய ஆயிரம் ரூபாய் கடனுக்கு மீட்டர் மேல் மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி கேட்டு மிரட்டுகிறார்கள். தான் சொல்வது எல்லாமே உண்மை, என் அம்மா தங்கையை விட்டு போகிறேன், எனக்கு இன்று ஒரு நாள் மட்டுமே கெடு”என்று அந்த வீடியோவில் கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.