இலங்கை இந்தியாவிடம் மேலும் 11,000 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறது. எரிபொருட்கள் வாங்க பணம் இல்லாததால் அந்நாட்டின் மின்சார உற்பத்தி முடங்கிப்போய் நாடு முழுவதும் கரண்ட் இல்லாமல் இருந்து வருகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து பணவீக்கம் அதிகரித்து அந்த நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருந்து, மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய இந்தியா உதவிக்கரம் நீட்டி பல்வேறு வகையில் நிதி உதவி வழங்கி வருகிறது.
இலங்கை அத்தியாவசிய பொருட்களை வாங்க 7400 கோடி ரூபாய் நிதி வழங்கிய இந்தியா, எரிபொருள் இறக்குமதிக்காக கூடுதலாக 3,700 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள இலங்கை நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் இந்தியாவிடம் மேலும் 11,000 கோடி ரூபாய் கேட்டு இருப்பதாகவும்,
இதுதொடர்பாக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே டெல்லி சென்று இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இலங்கைக்கு கண்டிப்பாக இந்தியா உதவிக்கரம் நீட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.