கோடிக்கணக்கில் மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலில் மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்தனர். ஆனால் காவல்துறையினரை கண்டவுடன் 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அவர்களை விடாது துரத்தி சென்ற காவல்துறையினர் 5 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குமரியை சேர்ந்த அஜித், ஜெனித், அரவிந்த், மிடாலம் பிபின், டேனியல் என்பது தெரியவந்தது. அவர்கள் திமிங்கல வாந்தியை தொடர்ந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபர் களிடமிருந்து சுமார் 6 கிலோ திமிங்கல வாந்தி, 1 கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதில் திமிங்கல வாந்தியின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் ஆகும். மேலும் காவல்துறையினர் பிடிபட்ட 5 வாலிபர்களையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.