திண்டிவனத்தில் மதுபான கடையின் மீது கல், மது பாட்டில்களை வீசி எறிந்த கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விழுப்புரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாண்டு மகன் செல்வகுமார்(45) மற்றும் திண்டிவனம் அருகில் ஆலகிராமம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (47) ஆகிய 2 பேரும் விற்பனையாளராக இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கடைக்கு ஒருவர் மது போதையில் மது பாட்டில் வாங்க வந்துள்ளார்.
அப்போது அவர் ரூ130யை கொடுத்து குவாட்டர், பீர் தருமாறு தகராறு செய்து விற்பனையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் அங்கு இருந்த சக மது பிரியர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு பத்து பேர் சேர்ந்து கும்பலாக மேம்பாலத்திற்கு கீழ் பகுதிக்கு வந்து அங்கு கிடந்த கற்களை எடுத்து மதுபானக்கடை மீது வீசியுள்ளனர். அதன்பின் அந்த கும்பல் மதுபானக் கடைக்குள் புகுந்து காலியான மது பாட்டில்களை எடுத்து விற்பனையாளர்கள் மீது வீசியுள்ளனர்.
இந்நிலையில் விற்பனையாளர் இருந்த இடத்தில் சுற்றி இரும்பு கூண்டு இருப்பதால் வீசி எறிந்த மதுபாட்டில்கள் சுக்குநூறாக நெருங்கியுள்ளது. மேலும் கும்பலுடன் வந்த வாலிபர் ஒருவர் காலியான பீர் பாட்டிலை எடுத்து உடைத்து விற்பனையாளரை குத்த முயன்றுள்ளார். ஆனால் விற்பனையாளர் சாமர்த்தியமாக விலகிக்கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் விற்பனையாளரை திட்டியுள்ளனர். இதை பார்த்து அந்தப் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பித்துச் சென்றனர். மேலும் இது குறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி மதுபான கடையின் மீது கல், காலி பாட்டில்களை வீசி எறிந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.