ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான் அந்த உள்ளாட்சி பதவி ஏலம் விடப்படுவதற்கான சூழல் இருப்பதாகவும் இதனையறிந்த மாநில தேர்தல் ஆணையம், மக்களாட்சி முறையில் தான் வாக்காளர் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது. உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும். உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தேர்தல் மூலம் மட்டுமே உள்ளாட்சி பதவிகளை நிரப்ப வேண்டும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொன்னங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.. ஊராட்சி தலைவர் பதவியை துத்திப்பட்டு கிராமத்தினர் ஏலம் விட்டு மங்கை என்பவரை தேர்வு செய்துள்ளனர். மங்கை ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணிப்பதாக பொன்னங்குப்பம் மக்கள் தெரிவித்தனர்..
இதனையடுத்து ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டது தொடர்பாக ஆட்சியர் மோகன், செஞ்சி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.. தேர்தலைப் புறக்கணிக்க போவதாக பொன்னங்குப்பம் மக்கள் கூறியதால் ஆட்சியர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..