முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சோலைமலை முருகன் கோவிலில் ஏற்கனவே முன் மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தங்க கொடிமரம் அமைத்தல், மூலவர் சன்னதியில் சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து நேற்று கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் மூலவர் சன்னதியாக உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஆதிவேல் சன்னதி மற்றும் வித்தக விநாயகர் போன்ற சன்னதிகளின் பழமையான மூன்று நிலை கதவுகளையும் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பூர்வாங்க பணியில் காரைக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பழைய கதவுகளில் இருக்கும் வெள்ளி தகடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகம விதிகளின்படி 3 அடி அகலம், 6 1/4 அடி உயரத்தில் ரூ.2 கோடி செலவில் வெள்ளி கதவுகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 2 மாதத்திற்குள் வெள்ளி கதவுகள் அமைக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, நகை சரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன் மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.