லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் தொட்டியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிகாட்டில் வசிக்கும் முருகானந்தத்தின் மனைவி முத்தரசி தனது மாமனார் பெயரில் இருக்கும் நிலத்தை தனது கணவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது இந்திராணி அவரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தரசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முத்தரசி இந்திராணியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்திராணியை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.