மழை வெள்ள பாதிப்புகளுக்கு 2,079 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பெருவெள்ளம் பலத்த சேதத்தை விளைவித்து. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத கனமழை காரணமாக தமிழக மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதில் டெல்டா மாவட்டங்களில் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தி ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. சாகுபடி செய்யும் வரை ஹெக்டர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 37 ரூபாய் மதிப்பில் இடுபொருள்கள் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர்அமித்ஷாவை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி ஆர் பாலு இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 2,079 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதில் சில முக்கிய விவகாரங்கள் பற்றியும் பேசபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு , தமிழகத்தின் நியாயமான அனைத்து கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்றும், போதிய நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.