இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும்.
தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இணையும் தொழிலாளர்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் 5000 பெறலாம். குறைந்தபட்ச ஓய்வுத்தொகையை பெற்றுக் கொள்வதற்கான உத்திரவாதமும் இதில் உள்ளது. இத்திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷனை கொடுக்கிறது. பென்ஷன் வாங்கும் ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு அந்த பென்ஷன் பணம் போய்ச் சேரும் .
இருவருமே இறந்து விட்டால் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட நாமினிக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இத்திட்டத்தில் இணைந்தால் நல்லது. இதில் மாதம் ரூபாய் 210 முதலீடு செய்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்ஷன் பெறலாம்.
18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். அனைத்து தேசிய வங்கிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து நிரப்பி வங்கியில் சமர்ப்பிக்கலாம். இதற்கு மொபைல் எண், ஆதார் அட்டை அவசியம். இந்த திட்டத்தில் சேர்வதற்கு அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் வரும்.