தமிழகத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினசரி ஒரு திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தபால் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களின் முதலீடு பணத்தை கையாடல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணிபுரிந்தவர் சிவசுப்பிரமணி (51). சேலத்தை சேர்ந்த இவர் சென்ற 2014-2016 ஆம் வருடம் வரை பணிபுரிந்த காலத்தில் தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தை முறையாக கணினியில் பதிவுசெய்யவில்லை. எனினும் வாடிக்கையாளர்களின் கணக்கு புத்தகத்தில் மட்டும் பணம் பெற்றுக்கொண்டது போல் கையால் எழுதி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க வந்தபோது அவர் பணத்தை கையாடல் செய்ததாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக தபால் அலுவலக உயர் அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்தனர். இவற்றில் சிவசுப்பிரமணி மொத்தம் ரூபாய்.22 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுபற்றி சி.பி.ஐ. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ், குற்றம் சாட்டப்பட்ட சிவசுப்பிரமணியத்துக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூபாய்.1½ லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.