கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால் ரோடு சாமி ஐயர் புது வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். வழக்கமாக சங்கர் தான் தயாரிக்கும் நகைகளை வெளியூர்களுக்கு கொண்டு சென்ற விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் கடந்த 3 ஆண்டாக மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிமேஷ் ஹசரே, அவரது மனைவி சோம ஹசரே, உறவினர் சுரஜித் ஹசரே, ஸ்டேயாஜித் ஆகிய 4 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் சங்கர் வீட்டின் மேல் மாடியில் தங்கி இருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் சங்கர் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1/2 கிலோ தங்க கட்டியை நான்கு பேரிடமும் கொடுத்து தங்க நகை செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து வியாபாரம் தொடர்பாக வெளியூருக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த சங்கர் 4 பேரும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர்களிடம் கொடுத்த தங்க கட்டியும் இல்லை. பின்னர் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் சங்கர் வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தம்பதி உட்பட 4 பேர் மீது வழக்குபதிந்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.