மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி அணில் பிரசாந்த் ஹெக்டே மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி இளமாரம் கரீம் போன்றோர் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட்ட விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே சிங் நேற்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஐந்து வருடங்களில் 2,349 கோடி ரூபாய்க்கு குத்தகை அடிப்படையில் ஆறு விமான நிலையங்கள் பொது தனியார் கூட்டமை முறையில் ஏலம் விடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கே.கே.ஆர்.என் ராஜேஷ்குமார் சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய வி.கே சிங், “சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி இருக்கிறது. இதனை விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுகளை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டது. அந்த வகையில் புதிய முனையம் ரூ.2,467 கோடிக்கு அமைகிறது. இதன் மூலமாக விமான நிலையத்தின் தரம் உயர்த்தப்படுகிறது. மேலும் புதிய விமான நிலையத்தை பொருத்தமட்டில் ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக சென்னை அருகே உள்ள பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.