Categories
மாநில செய்திகள்

ரூ.2500 ஐ எந்த ரேஷன் கடையிலும் பெறலாமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கி கொள்ள முடியுமா என்று எழுந்த கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு 2,500 ரூபாய் பணத்தை தங்களின் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி தமிழகத்திற்குள் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால், எந்த கடையிலும் பொருள்கள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது அதன் பிறகு மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சக்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் துணி அடங்கிய பரிசு தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதனையடுத்து ரேஷன் பொருட்களை வாங்குவது போல பரிசு தொகுப்பையும் எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பொங்கலுக்கு தங்களின் சொந்த ஊருக்கு செல்வதால் அதுபோன்று அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி உணவுத் துறை அதிகாரி கூறுகையில், “எந்த கடையிலும் பொருள்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் கடைகளுக்கு ஏற்கனவே ஒதுக்குவதை விட 5% பொருட்கள் கூடுதலாக அனுப்பப்படுகின்றன. அவற்றை வேறு குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை. ஏனென்றால் கடையிலேயே இருக்கும். ஆனால் ரொக்கப் பணத்தை கையாள்வது மிகவும் சிரமம். கூடுதல் பணம் வழங்கினால் தொலைந்து விட்டது என கூறவும் வாய்ப்புள்ளது. அதனை தடுக்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் முகவரிக்கு ஒதுக்கிய ரேஷன் கடையில் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |