பொங்கலை ஒட்டி பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கலுக்கான பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். பரிசுத்தொகை 2,500 ரூபாய் ஆக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இதை விநியோகிப்பதற்கான முறை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
பொங்கல் பரிசு பெற வரும் 26-ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெற வருகின்ற 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை வழங்கியிருக்கிறது.
ரேஷன் கடைகளில் முற்பகலில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகையை வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் வாங்க இயலாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் கூட்டத்தை தவிர்க்க பொதுவிநியோக கடைக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பும், பரிசு தொகை 2,500 ரூபாயும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.