27 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசிக்கும் ஷர்மிளா, ரேஷ்மா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உறையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கிறோம். இந்நிலையில் குழுவின் தலைவி எங்களது பெயரில் ஒரு வங்கியில் மொத்தம் 27 லட்ச ரூபாய் கடன் வாங்கி அதற்கான தவணை தொகையை வாரந்தோறும் செலுத்தி வந்துள்ளார்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திடீரென வீட்டை பூட்டிவிட்டு குழு தலைவியும், அவரது கணவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் வங்கி அதிகாரிகள் எங்களிடம் வாரந்தோறும் பணத்தை செலுத்த வேண்டும் என கூறியதால் வாங்காத கடனுக்கு 2 வாரமாக பணம் செலுத்தினோம். தற்போது வங்கி அதிகாரிகள் எங்களை மிரட்டுகின்றனர். எனவே பணத்தை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.