கே.சி வீரமணி கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தெரிவித்துள்ளது.
அதிமுக அரசில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 753 ரூபாய் சொத்து சேர்த்ததாக கே சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் சார்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,சென்னை,பெங்களூரு என கே.சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடைபெறுகின்றது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் அவர் சொத்துகளை வாங்கியதாக அந்த புகாரின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தனது பெயரிலும், தனது தாயார் பெயரிலும் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், கல்லூரி, மண்டபம் ஏலகிரி திருப்பத்தூரில் உள்ள தங்கும் விடுதிகளும், குடியாத்தம் கல்லூரியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.