வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், கிரெடிட் கார்டு சைபர் மோசடியில் ரூபாய் 3.82 லட்சத்தை பறிகொடுத்துள்ளார்.
தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டைப் உபயோகித்து சுமார் ரூ.4 லட்சம் மோசடி நடந்திருக்கிறது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 9 அன்று கபூரின் கணக்கிலிருந்து 5 முறைகேடுகளில் ரூ.3.82 லட்சம் மாற்றப்பட்டது. மும்பையிலுள்ள அம்போலி போலீஸ் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கடந்த புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கபூர் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்ததும் இது தொடர்பாக வங்கியில் விசாரித்தார். அதன்பின் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
இதுகுறித்து யாரும் தனக்கு கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்கவில்லை, தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை என தயாரிப்பாளர் காவல்துறையினரிடம் தெரிவித்தார். ஆகவே கபூர் கார்டைப் பயன்படுத்தும்போது யாரோ தரவுகளைப் பெற்றிருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் சந்தேகித்தனர். தற்போது கபூரின் கார்டிலிருந்து குருகிராமிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் சென்றது தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினரின் விசாரணை வாயிலாக குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.