சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ, எஸ்.பி.ஐ வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்தும் ரூ.4,000 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரர் ஆனந்த் போன்றோர் மீது சி.பி.ஐ அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆனந்த் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் மனுதாரர் தவறாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பெரிய அளவில் படிப்பில்லை என்ற காரணத்தினால் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என வாதிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் 10 போலி நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும், பங்குதாரராகவும் இருந்துள்ளதாக கூறி ஆனந்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.