ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..
உயிர்நீர் இயக்கம், அம்ருத் 2.0 திட்டம், மூலதன மானிய நிதியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.4,194. 66 கோடியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த டிசம்பர் 16ஆம் தேதி நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்வாக ஒப்புதலை தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்த தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 2,306 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகளுக்கும், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, போகலூர், நயினார் கோயில் மண்டபம், கமுதி, கடலாடி உட்பட 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2,306 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,422 ஊரக குடியிருப்புகளில் 3,19,192 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 30.40 லட்சம் பேர் பயன்பெறுவர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளும் குடிநீர் திட்டத்தில் பயன்படும். நெய்க்காரப்பட்டி, கீரனூர் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகளும் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும். வடமதுரை, வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,422 குடியிருப்புகளும் மொத்தம் 30.4 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தால் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர், பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர் வீதமும் ஊரகப்பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் குடிநீர்கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.