பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது வழக்கம். இந்த பணிகளை ஷாகன்லால் கடையில் மார்க்கெட்டிங் மேலாளராக வேலை பார்க்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமான் திவேஷி(45) என்பவர் கண்காணித்து வந்துள்ளார்.
வழக்கம்போல கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை விற்பனை போகாத 15 கிலோ 447 கிராம் தங்க நகைகள் லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் ஷாகன்லால் கடைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதில் 1 கிலோ 867 கிராம் தங்கத்தை மட்டுமே ஹனுமான் ஒப்படைத்துள்ளார். ஆனால் 13 கிலோ 580 கிராம் தங்க நகைகளை (6 கோடி ரூபாய் மதிப்பு) ஹனுமான் கணக்கில் காட்டாமல் மோசடி செய்ததை அறிந்து ஹாகன்லால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஷாகன்லால் சாத்ரி கோவை வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக இருந்த அனுமன் திவேஷியை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தனது நண்பரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தல்பத்சிங் என்பவரிடம் நகைகளை கொடுத்து வைத்தது தெரியவந்தது. பின்னர் ஹனுமன் திவேஷியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தல்பத்சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.