தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தன்னுடைய படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக ஜிஎஸ்டி ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 6.79 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னுடைய இசை பதிப்புகளின் காப்புரிமை நிரந்தரமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதமான செயல். என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதன்பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜிஎஸ்டி நிர்வாக ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரி வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய புகழை கலங்கப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு அபராத தொகையை உடனடியாக செலுத்துவதற்கு உத்தரவிடுவதோடு, இடைக்கால தடை விதித்ததையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் ஜிஎஸ்டி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.