நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 100.75 க்கு நேற்று விற்பனையானது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒரு சிலர் நூதனமான முறையில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிஐடியு அமைப்பின் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், மாவட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்த கொள்கையின் காரணமாக அழிந்துகொண்டிருக்கும் மோட்டார் தொழிலை பாதுகாத்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்கவும், ஜிஎஸ்டி வரியை வரம்புக்குள் கொண்டு வரவும், இன்சுரன்ஸ், இஎம்ஐ, சாலை வசதி கட்டணங்கள் நிறுத்தி வைக்கவும், டோல்கேட் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவும், இரண்டு சக்கர நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் குறிப்பிட்ட வாகன ஓட்டிகள் அனைவருக்கும் நிவாரண நிதியாக 7,500 ரூபாய் வழங்கிட வேண்டும் என்றும் போராட்டம் நடத்தியுள்ளனர்.