மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிறைவேற்றியுள்ளார்.
1 லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வரையிலான கல்வி கடன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சம் ரூபாய் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்திருந்தார். தனி நபர் வருமானம் 1 லட்சத்து 25 ஆயிரம் டாலரும், குடும்ப வருமானமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டாலரும் பெறுபவர்களுக்கு இந்த சலுகை அனைத்தும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, “குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது கல்வி கடன் 20 ஆயிரம் டாலர் வரை அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 16 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பலன் பெறுவர். மாத வருமானத்தில் 10% கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதை இனி 5 சதவிதமாக குறைத்துள்ளார். இது தவிர 10 ஆண்டுகள் கல்வி கடனை செலுத்தியவர்களுக்கு நிலுவை தொகையில் 12 ஆயிரம் டாலர் வரை ரத்து செய்யப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 20 ஆண்டுகள் கட்டி முடித்தவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்வி கடனுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், ஆகஸ்ட் 31 முடிவடைய இருக்கும் நிலையில், இதனை நவம்பர் மாதம் வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு வளரும் நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் பேசு பொருளாகியிருக்கின்றது.