பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2021-22 ஆம் ஆண்டுக்கு 91 கோடியை 15 ஆவது நிதி குழு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சென்னை நகர செயல்திட்ட அறிக்கை, நுண்ணறிய திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க ஐந்து இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ஒரு இடத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நான்கு இடங்களிலும் என மொத்தம் ஐந்து இடங்களில் 7 கோடியில் காற்று தர கண்காணிப்பு மையங்கள் அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த சென்னை ஐஐடியுடன் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.