இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி பணம் டெபாசிட் செய்து இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
பீகார் மாநிலத்தில் மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி மாணவர் பெயரில் வங்கிகள் தொடங்கப்பட்டு அதில் தொகைகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களான குருச்சந்திர விஷ்வா, ஆசிஷ் குமார் ஆகியோரின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கணக்கில் பணம் வந்து விட்டதா? என்பதை பார்ப்பதற்காக உத்திரபீகார் கிராம வங்கிக்கு சென்று தங்களின் கணக்கில் உள்ள தொகையை பற்றி விசாரித்துள்ளனர்.
அப்போது குருசந்திர விஸ்வா வங்கி கணக்கில் 60 கோடியும், ஆசிஷ் குமார் வங்கி கணக்கில் 900 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைய, இதைக்கேட்ட பெற்றோர் மாணவர்களின் பெற்றோரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க தடை விதித்து, வங்கி மேலாளர் மேல் வங்கிக்கு முறையீடு செய்தார். பிறகு மாணவர்களின் வங்கி கணக்கில் தவறுதலாக 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.