வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்துக்கு இன்று மற்றும் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை நெருங்கி வரக் கூடும் எனவும், இதனால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று பலத்த மழையும் நவம்பர் 10 ,11 ஆம் நாட்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி 10 ஆம் நாள் கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும், ரெட் எச்சரிக்கையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 11 ஆம் நாள் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் மற்றும் ஆரஞ்சு அல்லது விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ முதல் 25 செ.மீ வரையில் மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.