ரிசர்வ்வங்கியின் ஆளுநரான சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே ரெப்போவட்டி விகிதமானது அதிகரிக்கப்படும் என்ற கருத்து பரவலாகயிருந்தது. ஏனென்றால் இந்தியாவில் தற்போது பணவீக்கம் பிரச்சினை உயர்ந்திருப்பதால் ரெப்போவட்டியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படி ஆலோசனை கூட்டத்தில் ரெப்போவட்டி விகிதமானது 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புது மாற்றத்தின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் 4.90 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இந்த வட்டியை வேறுவழியின்றி அதிகரித்துள்ளதாக சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். முன்பாக கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா தாக்கம் இருந்ததால் மார்ச் மாதத்தில் ரெப்போவட்டியானது குறைக்கப்பட்டது. இதையடுத்து 2 வருடங்களாக ரெப்போ வட்டியில் கைவைக்கவில்லை. அதன்பின் 2022 மே 4ஆம் தேதி ரெப்போவட்டி மீண்டுமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரெப்போவட்டி அதிகரித்துள்ளதால் வாகனக்கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் -ஜூன் காலாண்டில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரிசர்வ்வங்கி இறங்கி உள்ளது. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் வைப்பதே ரிசர்வ் வங்கியின் இலக்கு ஆகும். அது 2 சதவீதம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். எனினும் அதனைத் தாண்டினால் ஆபத்து தான். இந்த நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியானது ரெப்போவட்டியை உயர்த்தியுள்ளது. இன்றையக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பேசிய சக்திகாந்ததாஸ், நடப்பு 2022-23 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் ஆக இருக்கும் என கூறினார். கொரோனா பிரச்சினைகளிலிருந்து மீண்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.