அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளும் கட்சி என்ற ஆணவத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் இது போன்ற ரெய்டுகளை நடத்திவருகின்றனர். அதிமுகவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த ரெய்டு நடக்கிறது. ரெய்டு மூலம் களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அது நிச்சயம் நடக்காது. புகார்கள் இருந்தால் அதனை நீதிமன்றம் விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும்.
நீதிமன்றம் இருக்கும் நிலையில் காவல்துறையை ஏவிவிட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாக தான் இதை பார்க்க முடிகிறது. உயிரை விட மானம் பெரியது. அப்படி இருக்கும் பட்சத்தில் காவல்துறையை வைத்து ரெய்டு நடத்துகின்றனர். ஆதாரங்களை நீதிமன்றத்திலேயே அவர்கள் கொடுத்திருக்கலாம். அதிமுகவை அழிக்க முடியாது. இதுபோன்ற செயல்கள் எல்லாம் வீண் என்று அவர் தெரிவித்துள்ளார்.