நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசின் உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு எளிய முறையில் ‘ரேஷன் கார்டுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகள் குடும்ப தலைவர்களின் வருமானத்தை பொறுத்து 5 வகையில் உள்ளது. எனவே இந்திய அரசின் இந்த திட்டம் மூலம் குறைந்த விலையில் பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், எண்ணெய், கோதுமை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல் மத்திய, மாநில அரசுகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தீவிரமடைந்ததால் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மக்களுக்கு இலவச மளிகை பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கியது. அதேபோல் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டமானது மற்ற மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் உள்ளிட்ட வேலைகளை ஆன்லைன் மூலமாக எளிதாக செய்யலாம். இந்நிலையில் மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளும் அளித்த பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு “ரேஷன் கார்டு தர நிலையில்” மாற்றம் கொண்டு வரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது உணவு வழங்கல் துறை வெளியிட்ட அறிக்கையின் படி, “தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நாடு முழுவதும் 80 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அவர்களில் பொருளாதார ரீதியாக செல்வாக்குடன் இருப்பவர்கள் பலர். எனவே இதனை கருத்தில் கொண்டு தற்போது ரேஷன் கார்டு தரநிலையில் மத்திய உணவு வழங்கல் துறை மாற்றம் கொண்டுவர உள்ளது. அந்த வகையில் புதிய தர நிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றம் செய்யப்படும்” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.