தமிழகத்தில் கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி பறிமுதல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 20 கிலோ முதல் 50 கிலோ வரை குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. இவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கடத்தி வருகிறது.
மேலும் காவல்துறை மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 16 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் கடத்திச் சென்ற இருவரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் திருப்பூர் மாவட்டத்தில் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சார்பில் ஆய்வாளர் இசக்கி மற்றும் போலீஸார் காங்கேயம் அருகே பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த லாரியில் 10 டன் ரேஷன் அரிசி, 6 டன் ரேஷன் அரிசி மற்றும் 700 கிலோ கோதுமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த லாரியின் ஓட்டுநரை போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சர்புதீன் என்பவர். ரேஷன் அரிசியை சேகரித்து வைத்து கர்நாடக மாநிலம் கொண்டு செல்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சரக்கு லாரி மற்றும் அரிசியை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். ரேஷன் கடை ஊழியர்களின் தவறான நடவடிக்கைகளால் ரேஷன் பொருட்கள் கடைகளில் விற்கும் அவலம் நடந்து வருவதாக ரேஷன் அட்டைதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.