தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
இதனைத்தொடர்ந்து நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2000 ரூபாயுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பொருள்களையும் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மளிகை பொருட்களோடு உடலுக்கு நோய்யெதிர்ப்பு சக்தி கொடுக்கக்கூடிய கபசுர குடிநீர் பாக்கெட்டையும் வழங்கவேண்டுமென திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் உடலில் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்தான கபசுர குடிநீரை அனைவரும் குடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தி வரும் நிலையில், ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து, கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை இலவசமாக விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.