புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குதல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு பண்டிகைப் பொருட்கள் இலவசமாக வழங்குதல் என பல்வேறு திட்டங்களுக்கான கோப்புகள் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த கோப்புகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.