தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு ரூபாய் 4 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதனை பெறுவதற்காக நியாய விலை கடைகளுக்கு மக்கள் வரும்போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நாளை முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும், கைரேகை பதிவு முறையை மீண்டும் அமல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.