சம்பள முரண்பாடு, ஆய்வு என்ற பெயரில் பணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை கூட்டுறவு துறை மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை நடத்தி வருகின்றது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும். அதே சமயம் புதிய ரேஷன் கார்டு வழங்குதல், பொருட்கள் வழங்குதல், கண்காணித்தல் ஆகியவற்றை உணவுத் துறையின் கீழ் உள்ள உணவு வழங்கல் துறை மேற்கொள்கின்றது.
இதில் சில சமயங்களில் எடை குறைவாக பொருள் வருவதால் ஊழியர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. மக்களுக்கு போதிய அளவில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய முடியவில்லை, இதற்கு உணவுத்துறை மீது கூட்டுறவுத்துறை குற்றம் சாட்டுகிறது. கூட்டுறவுத்துறை, உணவுத்துறை மீது குற்றம் சாட்டுகின்றது. அதுமட்டுமில்லாமல் சம்பளத்தில் முரண்பாடு பிரச்சனையும் உள்ளது. கூட்டுறவுத் துறையும் உணவுத்துறையும் ஒரே வேலையை செய்யும்போது கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு குறைந்த சம்பளமும், வாணிப கழக ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
இரு துறைகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பல்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர். இந்த பிரச்சினைகளை தவிர்க்க ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். மேலும் திமுக அரசு தனது அறிக்கையில் பல துறையின்கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதன்படி ஒரே துறையின் கீழ் ரேஷன் கடைகளை கொண்டுவருதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.