புதுச்சேரி ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசிக்குப் பதிலாக பணம் செலுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு இலவச அரசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் தர ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கிரண்பேடியின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறப்பட்டது.
அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு தற்போது அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட உள்ளது.
இதன் அடிப்படையில் நான்கு பிராந்தியங்களில் உள்ள சுமார் 20 ஆயிரத்து 544 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 15 கிலோ அரிசிக்குப் பதிலாக அரிசி கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் என்கிற விதத்தில் மூன்று மாதங்களுக்கான அரிசிக்குப் பதிலாக 1,350 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது. இதற்காக இரண்டு கோடியே 78 லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய் செலவிட முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.