தொட்டியம் பகுதியில் வெறிநாய் கடித்து 13 ஆடுகள் இறந்தன.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் அருகில் கார்த்திகைபட்டியில் வசித்து வருபவர் தவசுமணி. இவருடைய மனைவி 47 வயதான புள்ளாச்சி என்பவர் 30 -க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரேஷன் கடையில் பொருள் வாங்குவதற்காக தோட்டத்திலுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு சென்றுவிட்டார்.
அதன்பின் வீடு திரும்பிய அவர் தோட்டத்தில் உள்ள ஆடுகளை பார்க்க சென்றபோது பட்டிக்குள் இருந்த 13 ஆடுகள் இறந்து கிடந்தன. இதைப் பார்த்து புள்ளாச்சி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் பட்டிக்குள்ளே வெறிநாய்கள் புகுந்து ஆடுகளை கடித்ததால் அவை இறந்து விட்டன என்று தெரியவந்தது. இத்தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.