ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரை வட்ட வழங்கல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காவல்நிலையம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக ஒரு ரேஷன் கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தும் ஏவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் மர்மநபர் ஒருவர் ரேஷன் கடையில் இருந்து 3 மூட்டைகளை எடுத்துகொண்டு வெளியே வந்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடிப்பதற்குள் அந்த நபர் மூட்டையை அங்கேயே வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து ரேஷன்கடை ஊழியரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனைதொடர்ந்து பொதுமக்கள் உடனடியாக வட்ட வழங்கல் அலுவலர் பாபுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ரேஷன் கடையில் சோதனை செய்த போது கடையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர் செல்வத்தை உடனடியாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.