கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் சிறப்புகள் பற்றியும், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் கூட்டுறவுத்துறை மூலம் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது எனவும் ஏழை எளிய மக்களுக்கு பேரிடர் காலத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளனர். மேலும் பேரிடர் காலத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக சிறப்பான சமுதாய பணியாற்றியுள்ளனர்.
பேரிடர் காலத்தில் அரசு வழங்கியுள்ள நிவாரண உதவித்தொகை மற்றும் நிவாரண பொருள் உதவிகள் 100 %மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தரமற்ற அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டுமெனவும் விற்பனையாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நேரடியாக 9884000845 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். நியாயவிலை கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இந்த பயிற்சி முகாமில் உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் வே. ராஜாராமன் கலந்துகொண்டு பொதுவிநியோகத் திட்ட கட்டமைப்பு பொதுவிநியோகத் திட்ட நோக்கம் போன்றவை குறித்து எடுத்துரைத்து பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பயிற்சி முகாமில், கூட்டுறவுச் சங்கங்களில் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மு.அருணா, கலந்து கொண்டு நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர். இணைப்பதிவாளர் (பொவிதி) வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் மற்றும் உணவு வழங்கல் துறை துணை ஆணையர் ஆகியோர் பொது விநியோகத் திட்டம் குறித்து சிறப்பு பயிற்சி வழங்கியுள்ளார்.