ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அதை விட குறைந்த நாட்களே விடுப்பு வழங்கப்படுகின்றது. இதையடுத்து ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர், எடையாளர்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
தகுதியுள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு அரசால் அவ்வபோது அறிவிக்கப்படும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.