மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுத்து முடக்க போவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலம் மலிவு விலையில் மளிகை பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் சிறப்பு மளிகை தொகுப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகையும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. டெல்லியில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் உபயோகத்தில் உள்ளன. இதன்மூலம் 72 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அரசு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் தவறான நபர்களின் கைக்கு சென்று விடாமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த வகையில் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக எந்த பொருட்களும் வாங்காத ரேஷன் கார்டுகளை கண்டறிந்து விசாரணை செய்யப்படும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு பொருளும் வாங்காமல் இருந்ததற்கு சரியான காரணத்தை பயனாளிகள் அளிக்கவேண்டும். அவ்வாறு சரியான காரணம் அளிக்கப்படாத பட்சத்தில் அந்த ரேஷன் கார்டு முடக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.