இலங்கையில் இனி ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு ஏற்பட்டதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வீடுகளில் பல மணி நேரம் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒருவாரத்துக்கு தேவையான பொருள்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் சில இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக தேவையான எரிபொருளை பதுக்கி வைப்பது தெரியவந்துள்ளது. இதை தடுக்க அடுத்த மாதத்திலிருந்து இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது .
அதன்படி வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜூலை மாதம், முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு வாரத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த எரிபொருள் உத்தரவாதமாக வழங்கப்படும். எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் முறையில் பொதுமக்களுக்கு ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மட்டுமே வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.