சமீபத்தில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் மாஜிக்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனால் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள இளங்கோவனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை 6 மணி முதலே அதிரடியாக சோதனையில் இறங்கினர்.
இந்த சோதனையில் 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ.29.72 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவன் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசால் இந்த சோதனை நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலினின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.