தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் சியான் விக்ரம் இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி நாயகியாக நடிக்க, மிர்ணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ் மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா திரைப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோப்ரா படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விக்ரம் உட்பட படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சி ஜெயின் கல்லூரியில் விக்ரம் மற்றும் பட குழுவினர் மாணவ-மாணவிகளை சந்தித்து பேசினர். அப்போது நடிகர் விக்ரம் அந்நியன் படம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக கோப்ரா படமும் அனைவருக்கும் பிடிக்கும் என்றார். அதன்பிறகு கோப்ரா படத்தில் ஆக்சன், எமோஷன், சயின்ஸ் பிக்சன் உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்றார். இதனையடுத்து ரசிகர் ஒருவர் விக்ரமிடம் ஒரு படம் தோல்வி அடைந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு விக்ரம் ஒரு படம் தோல்வி அடைந்தால் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கும் என்றார். மேலும் கடுமையான போராட்டத்திற்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் படம் சில சமயங்களில் ரசிகர்களை சென்றடையாதது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறினார்.