100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 150 தொழிலாளர்கள் கடந்த 2 ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கருத்தப்பிள்ளையூர் கால்வாயில் பணிபுரிந்து வந்துள்ளனர். ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் ஆறு நாட்களுக்கு 600 ரூபாய் கூலி மட்டுமே 40 பேரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் மீதமுள்ள 110 தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே அரசு நிர்ணயித்த கூலி தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அட்டையை புதுப்பிப்பதற்காக பணம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.