சீராக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பெண்கள் மைக்கேல்பாளையம் நால்ரோட்டில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.