ஸ்ரீஆர்க் மீடியா சார்பாக சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “நாடு”. எங்கேயும் எப்போதும் பட புகழ் இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, சாட்டை புகழ் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்து உள்ளார். அத்துடன் முக்கியமான வேடங்களில் சிங்கம் புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் சரவணன் பேசியதாவது ” தற்போது திரைஉலகில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக் கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகிறது. நாங்கள் அதில் இருந்து விலகி எளிய மனிதர்கள் குறித்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இப்படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசியுள்ளோம். கொல்லிமலை பகுதியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. பல்வேறு வருடங்களுக்கு முன் கொல்லிமலைக்கு சென்றிருந்த வேளையில், நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. நீண்ட நாட்களாக மனதில் இருந்த அந்நிகழ்வை மையப்படுத்தி இப்படத்தின் கதையை உருவாக்கினேன்” என்று பேசினார்.