அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்ற 4 வருடங்களாக குமாரி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தினசரி காலை வழக்கம்போல பணிக்கு வரும் குமாரி, வெகு நேரமாக வரிசையில் காத்துநிற்கும், நோயாளிகளுக்கு உரியநேரத்தில் மருத்துவம் பார்க்காமல் அலட்சியப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதனை தட்டிக் கேட்கும் நோயாளிகளை மருத்துவர் குமாரி தரக் குறைவாக பேசுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அடிக்கடி சலசலப்பு ஏற்படுவது வழக்கமாக மாறி விட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்றும் அதேதான் நிகழ்ந்தது. அதாவது காலை 8 மணி முதல் நோயாளிகளும், காய்ச்சலில் அவதிப்படும் குழந்தைகளைச் சுமந்துகொண்டு பெற்றோர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசையில் நாய் கடித்து வலியால் அலறி துடித்துக்கொண்டிருந்த சிறுவனும் இருந்தார். அதன்பின் தாமதமாக பணிக்குவந்த மருத்துவர் பணி செய்யாமல் வெளியில் அமர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் கூட்டத்தைப் பார்த்து வந்த காவல்துறையினரிடமும் , தன்னுடைய கணவரிடமும் அப்பெண் மருத்துவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்பகுதியை சுற்றி உள்ள பல கிராமங்களின் பொதுமக்களுக்கும் இது தான் பெரிய மருத்துவமனை. இங்கு இது போன்ற ஒரு மருத்துவரை பணியில் அமர்த்தி மனித உயிர்களில் விளையாடி வருவது வேதனையளிப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆகையால் சரியான மருத்துவரை பணிக்கு அமர்த்தி உரிய நேரத்தில் மருத்துவர்கள் பணிக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.